நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு ஜூலை 8க்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் நடந்த பல்வேறு முறைகேடு காரணமாக மறுதேர்வு நடத்த வேண்டும் என சொல்லி தேசிய தேர்வு முகமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் வினாத்தாள் கசிவு, கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போன்றவற்றையும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதன்பின், 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்யப்பட்டதோடு, அந்த மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதி மறு தேர்வு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் எஸ்.வி.பாட்டி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “நீட் தேர்வு முறைகேட்டை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தனிக்குழு விசாரிக்க நடவடிக்கை எடுக்கும். அதானி – ஹிண்டன்பர்க் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தனிக்குழு விசாரித்தது. அதேபோல் இந்த முறைகேட்டையும் விசாரிக்க வேண்டும்.
மேலும், தேசிய தேர்வு முகமை எப்படி 1,563 மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு என்பதை முடிவு செய்தது. என்ன அளவுகோலை பின்பற்றி இந்த முடிவை எடுத்தது எனத் தெரியவில்லை. ஏனென்றால், இந்த மாணவர்களின் பட்டியல் இணையதளம் உள்ளிட்ட எதிலும் வெளியிடப்படவில்லை. தேசிய தேர்வு முகமை முற்றிலும் தன்னிச்சையாக முடிவெடுத்து 1,563 மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள், அவர்களுக்கு மறுதேர்வு என உத்தரவிட்டுள்ளது.” என்று வாதிட்டனர்.
வாதங்களுக்கு பதிலளித்த நீதிபதிகள், நீட் கவுன்சிலிங்குக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினர். எனினும், நீட் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மீதான விசாரணைக்கு தடை விதித்தனர். மேலும், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு ஜூலை 8-க்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.