“நீலகிரி சிறுமிகள் கடத்தலில் ஐ.எஸ். சதி” – இந்து முன்னணி மாநிலத் தலைவர் எச்சரிக்கை

நீலகிரி சிறுமிகள் கடத்தலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதி இருக்கலாம் என்பதால் அரசு அங்கு கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். நீலகிரி மலை கிராம மக்களை பயன்படுத்தி அவர்களை நக்சலைட் தீவிரவாதிகளாக மாற்ற முயற்சி நடப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி பழங்குடியினர் கிராமத்தில் வசிக்கும் 18 வயது நிரம்பாத சிறு பெண் குழந்தைகளை பெற்றோருக்கு தெரியாமல் கேரள மலப்புரத்தைச் சேர்ந்த சுனிரா, பைரோஸ், முபாஸ்லால் ஆகிய முஸ்லிம் நபர்கள் கடத்திச் செல்ல முயன்றனர். அதனை பார்த்த கிராமமக்கள் அவர்களை விரட்டி பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் காவல்துறையில் குழந்தைகளை வேலைக்கு அழைத்து செல்வதாகவும் வேறு ஒன்றும் இல்லை என்று கூறியதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

இதுபோன்றுதான் சின்னஞ்சிறு பிள்ளைகளை கடத்தி அவர்களை ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு விற்பனை செய்கிறார்கள் என்று பலரும் கூறுவது போல தற்போது இந்த சம்பவத்தை பார்க்கும் போது இதற்கு பின்னால் ஐ.எஸ்.சதி இருக்குமோ? என்று தோன்றுகிறது. ஏனென்றால் வேலைக்கு அழைத்து செல்வதற்கு பெற்றோரிடம் அனுமதி வாங்க வேண்டும். 18 வயது நிரம்பாத பெண்களை வேலைக்கு அழைத்துச் செல்வது சட்ட விரோதமாகும். ஆனால் கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் யாருக்கும் தெரியாமல் குழந்தைகளை ஏமாற்றி காரில் ஏற்றி கடத்திச் செல்ல முயன்று உள்ளார்கள்.

இதனை காவல்துறை கடத்தல் வழக்காகத்தான் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் நீலகிரி மாவட்டம் ஒரு ஒதுக்கப்பட்ட மாவட்டமாக இருந்து வருகிறது. குன்னூர் பகுதியில் விழிப்புணர்வு இல்லாத பல மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராம மக்களை பயன்படுத்தி அவர்களை நக்சலைட் தீவிரவாதிகளாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.

மேலும் கேரளாவைச் சேர்ந்த வயநாடு முஸ்லிம்கள் அதிக அளவில் ஊடுருவி அந்த பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை பல இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து மதம் மாற்றுவது, சிறார்களை கடத்தி அவர்களை கொத்தடிமையாக வேலைக்கு வைப்பது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அந்தப் பகுதி மக்கள் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் யாரை அணுகுவது என்று தெரியாத காரணத்தினால் பலரை இழந்துள்ளதாக தற்போது செய்திகள் வெளி வருகிறது.

இதனால் காலப்போக்கில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், மேற்கு தொடர்ச்சி மலையைச் சேர்ந்த நக்சல் பயங்கரவாதிகள் நீலகிரியை குறிவைத்து அங்கு இருக்கும் விழிப்புணர்வு இல்லாத இந்துக்களை மூளைச் சளைவை செய்து பல தவறான வேலைகளுக்கு பயன்படுத்தலாம் என எச்சரிக்கிறோம். இதன்மீது தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் பழங்குடியினர் மக்கள் பகுதிகளை ஆராய்ந்து வேறு மாநிலத்திற்கு யாராவது கொத்தடிமைகளாக வேலைக்கு சென்றுள்ளார்களா? இதுவரை யாராவது காணாமல் போய் புகார் கொடுக்காமல் இருந்துள்ளார்களா? பழங்குடியினர் மக்கள் இந்து மதத்தில் இருந்து வேற்று மதத்திற்கு மதம் மாறி உள்ளார்களா? யாராவது குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்படுகிறார்களா? என்று முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு நமது நாட்டின் சட்டப்படி வாழ விழிப்புணர்வு அளிப்பது தமிழக அரசின் கடமை.

இதனை செய்ய தவறினால், தமிழக அரசுக்கு நீலகிரி மாவட்டத்தின் மக்கள் மீது அக்கறை இல்லை என்பதே உண்மையாகும். சிறுமிகளை கடத்தியவர்களை முறையாக முழுமையாக விசாரிக்க வேண்டும். மக்களை பாதுகாக்க, பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்து முன்னணி வலியுறுத்துகிறது.” என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.