புதுச்சேரியில் சுற்றுலா, மீன்பிடி படகுகளில் பாதுகாப்பு ஒத்திகை

உரிய நேரத்தில் பழுதை நீக்காததால் இரண்டு ஆண்டுகளாக மக்கி வீணாகி வரும் ரூ. 2 கோடி மதிப்பிலான ரோந்து படகுக்கு பதிலாக சுற்றுலா மற்றும் மீன்பிடி படகுகளை வாடகைக்கு எடுத்து கடலோர காவல் போலீஸார் இன்று தேசிய அளவில் நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையைத் தொடங்கினர்.

இந்திய கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது. இன்று காலை தொடங்கி நாளை மாலை 5 மணி வரை சாகர் கவாச் ஒத்திகை நடைபெறுகிறது. புதுவை கடல் பகுதியில் மீன்பிடி படகில் தொலைநோக்கு கருவிகள் மூலமாக பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. புதுச்சேரி மீனவ கிராமங்களான காலாப்பட்டு, புதுக்குப்பம் வீராம்பட்டினம் உள்ளிட்ட 16 கிராமங்களில் சந்தேகம்படும்படி கடலில் தென்படும் கப்பல்கள், படகுகள் குறித்தும் சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டாலும் கடலோர பாதுகாப்பு போலீசுக்கு தெரிவிக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலோர காவல் படை போலீஸ் எஸ்பி பழனிவேல், இன்ஸ்பெக்டர் வேலன் ஆகியோர் தலைமையில் ஒத்திகை நடந்தது. இந்த பாதுகாப்பு ஒத்திகையை சுற்றுலா பயணிகள் செல்லும் படகு மற்றும் மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி படகுகளை வாடகைக்கு எடுத்து கடலோர காவல் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரோந்து படகில் செல்லாதது பற்றி கடலோர காவல்படை தரப்பில் விசாரித்தபோது, “கடலோர பாதுகாப்புக்காக புதுச்சேரியில் ரூ.2 கோடியில் ரோந்து படகு வாங்கி பழுதானது. பேட்டரி பழுதாகி நீண்ட நாட்களாக கடலில் நின்று என்ஜினும் வீணாகி விட்டது. தற்போது இதை சீரமைக்க பல லட்சம் தேவை. அதனால் கடலோர பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட ரோந்து படகு தேங்காய்த்திட்டு துறைமுகத்திலே நிறுத்தப்பட்டுள்ளது.

மீனவர் மாயமானால் அவர்களை மாநில காவல்துறையால் மீட்க முடியாது. இந்திய கடலோர காவல்படை உதவிதான் வேண்டும். உடன் நிதி ஒதுக்கி கோப்பு அனுமதியை விரைவுப்படுத்தும் நிர்வாக நடைமுறையை எளிதாக்கி இருந்தால் முன்பே சரி செய்து இருக்க முடியும்” என்றனர்.