“சிவகாசி பட்டாசுத் தொழிலைக் காக்க, ஜிஎஸ்டியை குறைக்கக் குரல் கொடுப்பேன்” – மாணிக்கம் தாகூர்

“சிவகாசி பட்டாசுத் தொழிலைக் காக்கவும், விருதுநகரில் ஜிஎஸ்டியை குறைப்பதற்காவும் நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர் மக்களைத் தொகுதியில் போட்டியிட்டு 3-வது முறையாக வெற்றிபெற்ற மாணிக்கம் தாகூர் எம்பி விருதுநகரில் இன்று வார்டு வாரியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன், நகராட்சித் தலைவர் மாதவன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர் ஆகியோர் உடன் சென்றனர்.

அப்போது, விருதுநகர் பெரியபள்ளிவாசல் சென்று அங்கு நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையிலும் தாகூர் பங்கேற்றார். அப்போது அவரளித்த பேட்டியில், “நாடாளுமன்ற தொகுதியில் ஆயிரம் இடங்களில் நன்றி அறிவிப்பு பயணம் 3 மாதங்களுக்குத் தொடரும். அதன்படி இன்று விருதுநகரில் வார்டு வாரியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறோம்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. முதலாளி சொன்னதை அவர்கள் செய்துள்ளார்கள். முதலாளி யார் என்பது ஊரறிந்த விஷயம். முதலாளியாக உள்ள மோடி, அமித் ஷா இட்ட கட்டளையை அப்படியே செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சிவகாசி பட்டாசுத் தொழிலைக் காக்கவும், விருதுநகரில் ஜிஎஸ்டியை குறைப்பதற்காவும் நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும். சாதி அரசியல் செய்வதும் மத அரசியல் செய்வதும் ஆர்எஸ்எஸ் டிஎன்ஏவில் உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்களே. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத ஆர்எஸ்எஸ்-க்கும் பாஜகவுக்கும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எந்த அறிவும் இல்லை.

ரவுடிகளின் உதவியோடு பாஜகவினர் அரசியல் செய்கிறார்கள். பாஜக ரவுடிகள் கட்சியாக மாறியுள்ளது. இதை நான் கூறவில்லை, தமிழிசை சவுந்தரராஜன் தான் கூறியுள்ளார். காங்கிரஸ் ஜனநாயக கட்சி. கருத்து மோதல் என்பது இயல்பானது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்தும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கருத்தும் ஒன்றுதான். அதை அவர்கள் சொல்லும் விதம்தான் மாறியுள்ளது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் நியாயமான, நேர்மையான விசாரணை வேண்டும் எனக் கோரியுள்ளோம். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாறியுள்ளது. விரைவில் தீர்வுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.