மதுரையில் அபிகான் 2024 சார்பில் மருத்துவமனைகளின் நிலைப்புத்தன்மை குறுத்து மாபெரும்  கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் விழா

மதுரையில் அபிகான் (AHPICON) 2024 சார்பில் மருத்துவமனைகளின் நிலைப்புத்தன்மைக்காக  மாநில அளவில் முதன் முறையாக நடைபெற்ற மாபெரும்  கருத்தரங்கில்  50-க்கும் மேற்பட்ட  பேச்சாளர்களும்,  சுமார் 500  மருத்துவப் பணியாளர்களும் பங்கேற்றனர்.  

இந்நிகழ்ச்சியில், ரேலா மருத்துவமனையின் தலைவர் புரொஃபசர் முகமது ரேலா அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருதும், தரமான சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் நேர்த்தி நிலைக்காக தமிழ் நாடெங்கிலும் 15 மருத்துவமனைகளுக்கு அபிகான் விருதுகளும் வழங்கப்பட்டன.  

மேலும் இந்நிகழ்ச்சி குறித்து அபிகான் அமைப்பின்  (AHPI) – ன் நிறுவனர் டாக்டர். அலெக்ஸாண்டர் தாமஸ் சுகாதார பராமரிப்புத் துறையின் நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சி மீதான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்வான அபிகான் 2024 – ல் தலைமை உரையை அவர் வழங்கினார். 

தொடர்ந்து  AHPI – ன் தலைமை இயக்குனர் டாக்டர். கிரிதர் கியானி ஆற்றிய உரையில் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் சுகாதார சேவைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற பொறுப்புறுதியுடன் செயல்படும் தற்போதைய அரசின் செயல்திட்டத்தை சுகாதார துறையும் ஏற்று அதற்கு வலுவான ஆதரவை வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.  இந்நாட்டில் சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் வழங்குவதில் தனியார் துறையின் பங்களிப்பு 70% – க்கும் அதிகமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.  “தனியார் துறையின் தொடர்ச்சியான, தளர்வில்லாத முயற்சிகளின் காரணமாக, நம்நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டில் சுமார் 32 ஆண்டுகளாக இருந்த இந்தியர்களின் சராசரி வாழ்நாள் காலமானது தற்போது சுமார் 72 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது.  ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு இணையாக இதனை 80 ஆண்டுகளுக்கும் அதிகமாக உயர்த்துவதே சுகாதாரத்துறை செயற்பாட்டாளர்களின் நோக்கம் எனவும், அதிகரித்து வரும் செலவுகளின் காரணமாக தனியார் துறையைச் சேர்ந்த மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் நிதி ரீதியாக நிலைப்புத்தன்மை உள்ளவையாக தனியார் துறை மருத்துவமனைகள் மாறுவதற்கு அரசு  உதவ வேண்டுமென்றும் கூறினார்.

மேலும் இக்கருத்தரங்கில் கருத்தாக்கம் குறித்து தமிழ்நாடு AHPI – ன் தலைவரும்  தேவதாஸ் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் – ன் துணைத்தலைவருமான டாக்டர். சதீஷ் தேவதாஸ் கூறியதாவது:- பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி காண்பதற்கும் மற்றும் சமூகத்தின் நலவாழ்வுக்கு தரமான சிகிச்சை பராமரிப்பை வழங்குவதற்கும் சுற்றுச்சூழல் நிலைப்புத்தன்மை மற்றும் நிதி ரீதியான வளர்ச்சி ஆகிய கோட்பாடுகளை உறுதியாக மருத்துவமனைகள்  செயல்படுத்துவது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.  மின்சக்திக்கான கட்டண செலவுகளை குறைப்பது மற்றும் குறைவான விலை மற்றும் கட்டணத்தில் மருத்துவமனைகளை நிறுவுவதற்கான நிலத்தை வாங்கவும் மற்றும் நிதிஉதவியைப் பெறவும் தனியார் துறை மருத்துவமனைகளுக்கு உதவுவதில் அரசு முனைப்புடன் ஆதரவளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  இரண்டாம் நிலை நகரங்களில் இயங்கி வரும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதார சேவைகள் சென்றடையும் நோக்கத்தை எட்டவும் அரசின் இந்த ஆதரவு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.  

இந்நிகழ்ச்சியில் சிம்ஸ் மருத்துவமனையின் துணை தலைவரும் அபிகான் 2024 நிகழ்வின் அமைப்பு குழு தலைவருமான ராஜு சிவசாமி, அபிகான் 2024-ன் அமைப்புக் குழு செயலரும் மற்றும் ஆல்ஃபா கேர் ஹாஸ்பிட்டல்ஸ்-ன் நிறுவனர்  & நிர்வாக இயக்குனருமான ஜெ. அடெல், உள்ளிட்ட நிர்வாகிகள் கூறும்பொழுது சராசரியாக மருத்துவமனைகளின் வருவாயில் 60% – க்கும் அதிகமான தொகை காப்பீடு நிறுவனங்கள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் காப்பீடு திட்டங்களிலிருந்து தற்போது கிடைக்கிறது.  ஆனால், வழங்கப்படும் சிகிச்சை சேவைகளின் செலவில், இந்த காப்பீட்டு தொகை 60% என்ற அளவிலேயே இருக்கிறது என வலியுறுத்தினார்.