“சரியான தலைமை இல்லாததால் அதிமுக சின்னா பின்னமாகிறது” – கார்த்தி சிதம்பரம் கருத்து

“சரியான தலைமை இல்லாமல் அதிமுக சின்னா பின்னமாகப் போய்க் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கோடநாடு வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்” என சிவகங்கை காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி ஈதுக்கா மைதானத்தில் இன்று நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் எப்போதும் மத ஒற்றுமைக்கு உறுதுணையாக இருக்கும். நீட் ஒரு மோசடி தேர்வு. நீட் தேர்வு நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. வினாத்தாள் கசிந்தது, கருணை மதிப்பெண் வழங்கியது என பல முறைகேடுகள் நடந்துள்ளன.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இத்தேர்வை தமிழகம் முதலில் எதிர்க்கத் தொடங்கியது. தற்போது மற்ற மாநிலங்களும் எதிர்க்கத் தொடங்கியுள்ளன. தமிழகம் கூறும் வாதங்களை மற்ற மாநிலங்களும் ஏற்கத் தொடங்கியுள்ளன.

சசிகலா பேசியது உட்கட்சி விவகாரம். தற்போது அதிமுகவில் சரியான தலைமை இல்லாமல் அக்கட்சி சின்னா பின்னமாகப் போய்க் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கோடநாடு வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வர வேண்டும்.

ஆந்திராவில் மாநில அரசியலில் எதிரெதிராக உள்ள ஜெகன்மோகனும் சந்திரபாபு நாயுடுவும் மத்திய அரசுக்கு ஆதரவு தருவது விசித்திரமாக உள்ளது. இருவரும் நெருக்கடிக்கு அடிபணிந்து ஆதரவு தருகின்றனர் என்பது தெரிகிறது” என்றார். சிறப்புத் தொழுகையில் கார்த்தி சிதம்பரத்துடன் காரைக்குடி காங்கிரஸ் எம்எல்ஏ-வான மாங்குடி உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.