தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுப்பயணம், திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும். திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து, சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது.
ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு, திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது. மேலும் மதிய உணவுக்குபின் திருச்சானுார் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இரவு உணவு வழங்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். திருப்பதி சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்களை (180042531111 (Toll free), 044-25333333 மற்றும் 044-25333444) தொடர்பு கொண்டு பெறலாம்” என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.