தோல்வி பயத்தினால் இடைத்தேர்தலில் இருந்து அதிமுக பின்வாங்கிவிட்டது : அமைச்சர் முத்துசாமி

“முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் மீறி எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலும் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருக்கிறது” என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றதோ அதை தீர்க்க வேண்டும். அவர்களுக்காக ஒவ்வொரு நிமிடமும் யோசித்து அதை செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயல்படுவதால்தான், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு ஒரு நன்றி பாராட்ட வேண்டும் என்று சொன்னபோது கூட அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் எல்லாம் பேசித்தான் பிறகு அதனை ஏற்றுக்கொண்டார். அந்த அளவிற்கு அவர் எதையும் தன்னடக்கத்துடன் செய்யக்கூடிய முதலமைச்சராக இருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று அதிமுக எடுத்துள்ள முடிவு அவர்கள் சூழ்நிலையை மனதில் வைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் மீறி அதிமுகவால் எதுவும் செய்ய முடியாது என்ற தோல்வி பயத்தினால் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள். இந்த முடிவை எடுக்க வேண்டிய ஒரு சூழலில் இருக்கிறார்கள். வருகிற 2026ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அதிமுக சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்கலாமே தவிர அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேர்தலை சந்திக்க இருக்கும் சூழலில் நிச்சயமாக இதைவிட பெரிய வெற்றியாக தான் இருக்கும். இந்த இரண்டு ஆண்டுகளில் முதல்வர் செய்யக்கூடிய பணிகள் அந்த வெற்றிக்கு இன்னும் கூடுதல் பலத்தை கொடுக்கும்” என்றார்.