பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் 2 துணை முதல்வர்கள் பதவியும் கட்சியின் உத்தியும்

பாஜக ஆளும் மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் அமர்த்தப்படுவது அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்பளிப்பது உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

இந்தமுறை சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஒடிசாவில் ஆட்சி அமைத்துள்ளது. ஒடிசா முதல்வராக மோஹன் சரம் மஜி பதவி ஏற்றுள்ளார். இவருக்கு துணை முதல்வராக பார்வதி பரிதா மற்றும் கே.வி.சிங் ஆகிய இருவர் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுபோல், பாஜக ஆளும் மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் அமர்த்தப்படுவது புதிதல்ல. இதற்குமுன், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும் இரண்டு துணை முதல்வர்கள் அமர்த்தப்பட்டனர். இந்த பட்டியலில் 5வது மாநிலமாக ஒடிசா இடம் பெற்றுள்ளது. இந்த துணை முதல்வர்கள் அமர்த்தும் முறை கடந்த 2017 இல் முதன்முதலாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக அறிமுகப்படுத்தியது.

இங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றிருந்தார். இவருக்கு இரண்டு துணை முதல்வராக பிரகேஷ் பாதக் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா அமர்த்தப்பட்டனர். இதன் பின்னணியில் உபியின் முக்கிய சமூகங்கள் அனைத்திற்கும் வாய்ப்பளிப்பது பாஜக உத்தியாக இருந்துள்ளது. இதுவே, ஒடிசாவிலும் தொடர்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

உ.பி.யில் 2017 வெற்றிக்கு பின் முதல்வரான யோகி, ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர். துணை முதல்வராக அமர்ந்த கேசவ் பிரசாத் மவுரியா ஓபிசி வகுப்பை சேர்ந்தவர். பிராமணர் சமூகத்தில் மற்றொரு துணை முதல்வரான பிரஜேஷ் பாதக் அமர்த்தப்பட்டிருந்தார். உபியில் துவக்கப்பட்ட புதிய முறைக்கு கட்சியினர் இடையே நல்ல வரவேற்பு இருந்தது.

இதனால், பாஜக தாம் ஆட்சி அமைக்கும் இதர மாநிலங்களிலும் துணை முதல்வர் அமர்த்தலை கடைப்பிடிக்கத் துவங்கியது. எனினும், மகராட்டிராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி கடந்த வருடம் ஆட்சி அமைத்தது. இதிலும் இரண்டு துணை முதல்வர்கள் அமர்த்தப்பட்டாலும் அது, சமூகத்தினர்களுக்கானதாக இல்லை. இது அங்கு அமைந்த கூட்டணி ஆட்சியில் அனைவருக்கும் பங்களிக்கும் விதமாக இருந்தது. அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் துணை முதல்வர்கள் கிடையாது.

இதேபோல், பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷாவின் காலத்தில் பாஜகவில் மற்றொரு மாற்றமும் பாஜகவில் பார்க்க முடிகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் முதல்வர்களாக இருந்த முத்த தலைவர்கள் விலக்கப்பட்டு அவர்கள் தேசிய அரசியலில் களம் இறக்கப்படுகின்றனர். இந்த பட்டியலில், மபியின் சிவராஜ்சிங் சவுகான், ஹரியானாவின் மனோகர் லால் கட்டார், உத்தராகண்டின் திரிவேந்தர் சிங் ரவாத் எனத் தொடர்கின்றனர். இந்தவகையில், ஜார்கண்டின் முதல்வராக இருந்த மூத்த பாஜக தலைவரான ரகுபர் தாஸ் மட்டும் ஒடிசாவின் ஆளுநராக அமர்த்தப்பட்டுள்ளார்.