“நீட் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களும் மிக மோசமான மனநிலையில் உள்ளனர்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“நேரப் பற்றாக்குறை காரணமாக, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் தர வேண்டும் என்று எந்த இடத்திலும் தீர்பில் கூறப்படவில்லை. நீட் தேர்வில் மிகப் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இதனால், இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீட் தேர்வெழுதிய 23 லட்சம் மாணவர்களுமே, இன்றைக்கு மிக மோசமான ஒரு மனநிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்த நீட் தேர்வில் ஏற்பட்டிருக்கிற குழப்பங்களும், குளறுபடிகளும், தொடர்ந்து அரங்கேறிய வண்ணமே இருக்கிறது. நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இருக்கும் குளறுபடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில், 718, 719 என்று பலருக்கு மதிப்பெண்கள் இருந்தன. இது சாத்தியமில்லாத ஒன்று.

189 கேள்விகளையும் தேர்வர்கள் எழுதியிருந்தால், அவர்களுக்கு 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்வியை எழுதாமல் விட்டிருந்தால், அவர்களுக்கு 716 மதிப்பெண்கள் கிடைக்கும். அதுவே தவறாக விடை அளித்திருந்தால், 715 மதிப்பெண்கள் கிடைக்கும். இந்த நிலையில், தேர்வெழுதியவர்களுக்கு 718, 719 மதிப்பெண்கள் எப்படி கிடைத்தது என்பது கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் கேள்வி. இந்த நிலையில்தான், தேசிய தேர்வு முகமை, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் தரப்பட்டதாக கூறுகிறார்கள்.

நேரப் பற்றாக்குறை காரணமாக, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் தர வேண்டும் என்று எந்த இடத்திலும் தீர்பில் கூறப்படவில்லை. நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இதனால், இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் திமுகவில் இருந்து மட்டுமே நீட் தேர்வுக்கு எதிராக ஒரு முழக்கம் தொடங்கப்பட்டது என்ற நிலையைக் கடந்து, இந்தியா முழுவதும் இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வெழுதிய 23 லட்சம் மாணவர்களுமே, இன்றைக்கு மிக மோசமான ஒரு மனநிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கு, நீட் தேர்வை ஒழிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.