“கல்லூரி மாணவர்கள் ஏன் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு

“கல்லூரி மாணவர்கள் ஏன் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று சென்னையில் நடைபெற்ற கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ‘காலம் உள்ளவரை கலைஞர்’ நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி ஆயிரம் கல்லூரி மாணவ – மாணவியருக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு குறிப்பாக, மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அரங்கில்தான் தொடங்கிவைத்தார். அன்றைய தினம் முதல்வருக்கு பிறந்த நாள். அந்த கொண்டாட்டத்துக்கு முன்னதாக இங்கு வந்து தனது கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 28 லட்சம் மாணவ – மாணவியர் பயன்பெற்றுள்ளனர். அவர்களில் 25 பேர் லண்டன் சென்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் உலகத்துக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் அனைவரும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அவரது ஆட்சிக் காலத்தில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. எல்லா தரப்பினரின் உயர்வுக்கும் கருணாநிதி எவ்வாறு காரணமாக இருந்தார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

உங்களை திமுக கட்சியில் சேரச் சொல்லவில்லை. அதேசமயம் நீங்கள் எல்லோரும் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதில் கூகுளுக்குள் சென்று திமுக அரசின் சாதனைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அனைவரும் படிப்பில் முழு கவனம் செலுத்தி பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித் தர வேண்டும்” என்றார்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை எம்பி-யான தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் பேசினர். இந்த விழாவையொட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் 20 பேருக்கு ஆட்டோக்களும் வழங்கப்பட்டன.