ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோயிலின் நான்கு கதவுகளும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகநாதர் கோயிலின் மூன்று கதவுகளும் கொரோனா பெருந்தொற்று பரவலின் போது மூடப்பட்டது.
அக்கதவுகள் பகவான் ஜெகநாதருக்கு மங்கள அலட்டி சடங்கு செய்த பின்னர் திறக்கப்பட்டது. முன்னதாக, நேற்று நடந்த ஒடிசா அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.
இந்தநிகழ்வில், மாநில முதல்வர் மோகன் மாஜி, அவரது இரண்டு துணை முதல்வர்கள், பாஜக எம்.பி.க்கள் கட்சித் தலைவர்கள் கோயிலுக்கு வந்து ஜெகந்நாதரை வழிபட்டனர். மேலும் அவர்கள் கோயிலைச் சுற்றி ‘பரிக்ரமா’ நடத்தினர். கோயில் கதவுகள் திறக்கப்பட்ட பின்பு பேசிய மாநில முதல்வர் மோகன் மாஜி, “பதவி ஏற்பு நிகழ்வு முடிந்ததும், பாஜக அரசு புதன்கிழமை மாலை ஜெகந்நாதர் கோயிலின் நான்கு கதவுகளையும் திறக்க முடிவு செய்தது. இன்று காலை 6.30 மணிக்கு மங்கள அலட்டி சடங்குக்கு பின்னர் கதவுகள் திறக்கப்பட்டன.
சூழ்நிலைகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகையை சீர்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். மேலும், கோயிலின் சிறந்த நிர்வாகம், பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்காக ரூ.500 கோடி கார்பஸ் நிதியாக ஒதுக்க மாநில அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்” என்று முதல்வர் மாஜி தெரிவித்தார்.
மாநில அமைச்சர் சுரேஷ் புஜாரி கூறுகையில் பொதுமுடக்கம் முடிவடைந்த பின்னரும் ஏன் ஜெகந்நாதர் கோயில் கதவுகள் திறப்படவில்லை என்பது குறித்து விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர், “நாங்கள் பகவான் ஜெகந்நாதரை தரிசித்தோம் உலக மக்களின் நன்மைக்காக வேண்டிக்கொண்டோம். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒடிசா மக்களுக்கு சேவை செய்யும் பலத்தினை தரும்படி வேண்டினோம்” என்றார்.
பரி ஜெகந்நாதர் கோயிலின் அனைத்து கதவுகளும் திறக்கப்படும் என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. கொரோனா பெருந்தொற்றின் போது, முந்தைய பிஜு ஜனதா தளம் அரசு கோயிலின் நான்கு வாயில்களில் மூன்று கதவுகளை மூடியது. பக்தர்கள் கோயிலின் சிங்கதுவாரா (சிங்க வாயில்) வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வாயிலின் மற்ற மூன்று வாயில்களும் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.