புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கான கேண்டீனை மீண்டும் திறந்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை நிர்வாகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதியான எஸ்.பக்ரூதின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேன்டீன் திடீரென கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் கைதிகள் அடிப்படை உணவு தேவைகளுக்கு சிரமமடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மூடப்பட்டுள்ள கேன்டீனை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ்திலக், “புழல் சிறையில் உள்ள கேண்டீன் மூடப்படவில்லை. முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஸ்மார்ட் கார்டு மூலமாக பணம் கொடுத்து பொருட்கள் வாங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, புழல் சிறைக்கு சென்று பார்த்தபோது கேண்டீன் மூடப்பட்டிருந்தது எனத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், புழல் சிறையில் உள்ள கேண்டீனை மீண்டும் திறந்து அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிறைத்துறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.