வாட்ஸ் அப் குழு மூலம் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு சான்றிதழ் பயிற்சி

புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வாட்ஸ் அப் குழு மூலம் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு சான்றிதழ் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்விற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், விவசாயத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாய விரிவாக்க பணிகளை செயல்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த முயற்சிகளின் ஒன்றாக வாட்ஸ் அப் குழு மூலம் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு சான்றிதழ் பயிற்சியை துவக்கியுள்ளது. இந்த பயிற்சியில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 100 விவசாயிகள் பங்கேற்பார்கள். பயிற்சி மூன்று மாத காலம் நடைபெறும். இந்த பயிற்சிக்காக விவசாயத்துறையில் நிபுணத்துவம் பெற்ற குழு புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் கலந்துரையாடல் முறையில் பாடத்திட்டத்தை தயார் செய்துள்ளது. இந்த பாடத்திட்டம் மூன்று நாட்கள் இடைவெளியில் வாட்ஸ் அப் குழு மூலம் அனுப்பப்படும். 15 நாட்களுக்கு ஒரு முறை வினாடி வினா முறையில் கற்றல் திறன்கள் அளவிடப்படும். மூன்று மாத முடிவில் பங்கேற்பு முறையில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத இடுப்பொருட்களை பயன்படுத்துவதிலும் மேம்பட்ட அறிவு பெற்றவர்களாக விளங்குவார்கள் என்றார்.

புதுக்கோட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் பணி நிறைவு செய்த இணை இயக்குனர் எம்.பெரியசாமி பயிற்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது துவக்க உரையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த சான்றிதழ் பயிற்சி இயற்கை விவசாயத்தை தீவிர படுத்தவும், இடுப்பொருட்கள் செலவை குறைத்து அதிகமாக மகசூல் பெறவும் நல்ல வாய்ப்பாக அமையும் என்றார். பயிர் மருத்துவர் பி.செந்தில்குமார் சான்றிதழ் பயிற்சி வாட்ஸ் அப் மூலம் நடைபெறும் முறை பற்றியும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கி கூறினார். மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் கே.சதாசிவம் விவசாயிகளை வாழ்த்தி பேசினார். கள ஆர்வலர் டி.விமலா அனைவரையும் வரவேற்றார். தொழில்நுட்ப அலுவலர் கேஸ்.பிரிட்டோ நன்றி கூறினார்.