தமிழக அரசு திட்டங்கள் : மாவட்ட ஆட்சியர்கள் உடன் தலைமைச் செயலர் 3 நாள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஜூன் 11, 13 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், ஜூன் 6 முதல் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதையடுத்து, அரசு நிகழ்ச்சிகள் வரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. வரும் ஜூன் 24-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், துறைகள் தோறும் ஆலோசனைக் கூட்டங்கள், புதிய அறிவிப்புகளை இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசின் முக்கியமான 16 துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா முடிவெடுத்து, ஜூன் 11 முதல் 19 வரையிலான காலகட்டத்தில், 4 நாட்கள் மாவட்ட ஆட்சியர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது ஜூன் 11 முதல் 15 வரை மூன்று நாட்களில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் சந்திக்கும் வகையில் நிகழ்ச்சி நிரல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 11-ம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்ப்டினம் திருவாரூர் ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, ஜூன் 13-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஜூன் 15-ம் தேதி திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சிவகெங்கை மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலர் அறை அருகில் உள்ள கூட்ட அரங்கில் காலை 9.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.