மத்திய இணை அமைச்சராக நேற்று பதவியேற்ற நடிகர் சுரேஷ் கோபி, “தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். பதவியில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுவேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவின் முதல் பாஜக எம்.பி.யாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் சுரேஷ் கோபி. தொடர்ந்து நேற்று மாலை ராஷ்டிரபதி பவனில் நடந்த பிரமாண்டமான பதவியேற்பு விழாவில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இன்னும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், “எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்பதே என் நிலைப்பாடு. இதனை முன்கூட்டியே பாஜக தலைமையிடம் தெரிவித்துவிட்டேன். கமிட் ஆன படங்களில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பொறுப்பு எனக்கு வேண்டாம் என்றேன். பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் பதவி பிரமாணம் செய்துகொண்டேன். எனினும், விரைவில் நான் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவேன் என நம்புகிறேன். அதனை அவர்கள் தீர்மானிப்பார்கள்.
எம்.பி. என்ற நிலையில் திருச்சூருக்கு தேவையான பணிகளை மிக சிறப்பாக செய்வேன். எய்ம்ஸ் மருத்துவமனையை இங்கு கொண்டுவர உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சராக பதவியேற்ற மறுநாளே அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என்று சுரேஷ் கோபி மலையாள ஊடகத்துக்குப் பேட்டியளித்தாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சுரேஷ் கோபி வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் என்றே தேர்தலில், பாஜக பிரச்சாரம் செய்தது. அதன்படி, வெற்றிபெற்ற பின்னர், அமைச்சரவையில் அவருக்கு இடம் உண்டு என்றும் தகவல் வெளிவந்தன. இந்த விவாதங்களுக்கு மத்தியில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் சனிக்கிழமை இரவு மீண்டும் கேரளா திரும்பினார் சுரேஷ் கோபி. மறுநாள் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுக்காக டெல்லி செல்ல அவர் எந்த விமானத்திலும் முன்பதிவு செய்யவில்லை.
இதனால் அமைச்சர் பதவிக்கு வேறு ஒருவர் பரிசீலிக்கப்படுவதாக வதந்தி பரவியது. இந்த ஊகங்களுக்கு மத்தியில், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு ராஷ்டிரபதி பவனில் இருந்தும், பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், சுரேஷ் கோபிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அவரை நேரடியாக அழைத்து பேசி, உடனடியாக வருமாறு வலியுறுத்திய பின்னரே நேற்று மதியம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து அவசர அவசரமாக டெல்லி கிளம்பி சென்றார் அவர்.
விமான நிலையத்தில் பேட்டியளித்த சுரேஷ் கோபி, “மோடி முடிவு செய்தார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்” என்றார். இதன்பிறகு நடந்த பதவியேற்பு விழாவில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நிலையில், தற்போது அமைச்சர் பதவியில் விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.