அமராவதி : ஜூன். 8, சொத்து குவிப்பு வழக்கில் வெள்ளிக்கிழமை தோறும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் ஜெகன்மோகன் உள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் மீது உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே இந்த வழக்கில் 18 மாதம் சிறையில் இருந்த ஜெகன் மோகன் நீதிமன்றம் நிபந்தனைகளின்கீழ் ஜாமீன் வழங்கியது. அதன் பிறகு பாத யாத்திரை மேற்கொண்டு முதல்வராக பதவியேற்றார். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நிர்வாக பொறுப்புகள் காரணமாக இத்தனை ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியை ஜெகன்மோகன் ராஜினாமா செய்தார். இருப்பினும் கவர்னர் அப்துல் நசீம் புதிய அரசு பதவி ஏற்கும் வரை காபந்து முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார். சந்திரபாபு 12ம் தேதி பதவியேற்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெகன்மோகன் இனி, வெள்ளிக்கிழமை தோறும் ஐதராபாத் நம்பள்ளியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் தனது சொந்த செலவில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.