சென்னையில் காணாமல் போன சிறுமியை 8 நேரத்தில் போலீஸார் மீட்டனர்.
சென்னை அமைந்தகரை பகுதியில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் அமைந்தகரை காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில், ‘எனது மகள் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததால், அவளை கண்டித்தேன். இதனால், கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். அவள் செல்லும் போது, செல்போனையும் எடுத்து சென்றுவிட்டாள். செல்போனில் தொடர்பு கொண்டால், அழைப்பை துண்டிக்கிறாள். எனவே, அவளை எப்படியாது மீட்டுத் தர வேண்டும்,’என தெரிவித்திருந்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். சிறுமியின் செல்போன் எண் சிக்னலை ஆய்வு செய்த போது, முதலில் செல்போன் எண் சென்னை சென்ட்ரலை காட்டியது. அதன்பிறகு, சென்போன் சிக்னல் வேலூரை காட்டியது. தொடர்ந்து, வெகுநேரமாக வேலூரில் சிக்னல் காட்டியதால், வேலூர் போலீஸாரை தொடர்பு கொண்டு, சிறுமி காணாமல் போன தகவலையும், வேலூரில் சிறுமி இருக்கும் தகவலையும் அமைந்தகரை போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து வேலூர் போலீஸார், சிறுமியின் செல்போன் சிக்னலை வைத்து, பேருந்து நிலையம் அருகில் வைத்து சிறுமியை மீட்டு அமைந்தகரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சிறுமி காணாமல் போய் 8 மணி நேரத்தில் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸாருக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.