மதுரை அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா : போட்டி போட்டு மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்

மதுரை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்மாயில் மீன்களை போட்டி போட்டு அள்ளிச்சென்றனர்.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி, அம்மச்சியாபுரம், தொப்புலான்பட்டி, உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட ஐந்துமுத்தன் கோயில் கண்மாய் உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாயில் வேண்டுதலாக சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மீன் குஞ்சுகளை காணிக்கையாக வாங்கி விடுவர். ஆண்டுதோறும் பங்குனி மாதம் இந்த கண்மாயில் அனைவரும் சமத்துவ முறையில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர்.

அதன்படி இன்று மீன்பிடித் திருவிழா நடைபெறும் என சுற்றுவட்டாரப் பகுதியில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதில் நத்தம், மேலூர், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே கண்மாய் முன்பு காத்திருந்தனர். தொடர்ந்து கிராமப் பெரியவர்கள் வந்து வெள்ளை கொடியை காட்டி அனுமதி அளித்தவுடன் மீன்களை பிடிக்க துவங்கினர்.

இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, கெளுத்தி, அயிரை, விரால், ரோகு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். கண்மாயில் பிடித்த மீன்களை விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளிலே சமைத்து உண்ணுவர். இது போன்று மீன்பிடி திருவிழா நடத்துவதன் மூலம் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.