மீண்டும் சிறைக்கு செல்ல நெருங்கும் நேரம் : கேஜ்ரிவால் உருக்கம்

ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், இடைக்கால ஜாமீன் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தொண்டர்களுக்கு அவர் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.

டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய ஊழல் முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் 21 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி, கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் கேஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே தனது உடல் நிலையை குறிப்பிட்டு மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்பதால் ஜாமீன் காலத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க கோரி, கேஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு விசாரணை குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார் என விடுமுறைக்கால அமர்வு கூறிவிட்டது.

இதனால் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் நீட்டிப்பு உடனடியாக கிடைக்கவில்லை. இச்சூழலில் கேஜ்ரிவால் பேசியதாக ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலில், “தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய உச்ச நீதிமன்றம் எனக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்தது. நாளை மறுநாள் நான் மீண்டும் திகார் சிறைக்குச் செல்வேன். இந்த முறை என்னை எவ்வளவு காலம் சிறையில் வைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் உற்சாகம் அதிகமாக உள்ளது. நாட்டை சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற நான் சிறைக்குச் செல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

அவர்கள் (பாஜக) என்னை பல வழிகளில் நிலைகுலைய வைக்க முயன்றனர். என் குரலை நசுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் வெற்றி பெறவில்லை. நான் சிறையில் இருந்த போது, அவர்கள் என்னை பல வழிகளில் சித்திரவதை செய்தனர்.

அவர்கள் என் மருந்துகளை நிறுத்திவிட்டார்கள். அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? எனது உடல்நிலை சமீபத்தில் ஒரு தீவிர நோயின் அறிகுறிகளைக் காட்டியது. நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோரை கவனித்துக் கொள்ளுமாறு டெல்லி மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாக ஆங்கில செய்தி ஊடக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.