என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்

தமிழகத்தில் 12 என்கவுண்டர்களைச் செய்து பரபரப்பு ஏற்படுத்திய கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை பணி ஓய்வு பெறும் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் கடந்த 1997-ம் ஆண்டு எஸ்.ஐயாக பணியைத் தொடக்கியவர் வெள்ளத்துரை. கடந்த 2012-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை உருவாக்கப்பட்டது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான வெள்ளத்துரையால், ரவுடிகள் அடுத்த மாநிலத்திற்கு தப்பியோடி தலைமறைவானதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த 2004-ம் ஆண்டு சந்தன மரக்கடத்தல் மன்னன் வீரப்பனை என்கவுண்டர் செய்த சிறப்பு அதிரடிப்படையில் முக்கிய பங்காற்றிய வெள்ளத்துரை, 2003-ம் ஆண்டு சென்னையைக் கலக்கிய பிரபல தாதா அயோத்தி குப்பம் வீரமணி உள்பட 12 பேரை என்கவுண்டர்களை செய்துள்ளார். கடந்த 27 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றி வந்த வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்தார்.

இந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது காவல் துறை வட்டாரத்தில் மட்டுமின்றி அவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கொக்கிகுமார் என்பவரின் காவல் நிலைய மரணம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் கடந்த 2013 ஜூன் 6- ம் தேதி ராமு (எ) கொக்கிகுமார் என்ற விசாரணைக்கைதி மரணம் அடைந்தது தொடர்பாக வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மானாமதுரை சரக டிஎஸ்பியாக பணியாற்றினார்.

கொக்கிகுமார் என்றழைக்கப்படும் ராமு, திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காடு பகுதியில் ஒருவரிடம் கத்தியை காட்டி 500 ரூபாயை வழிப்பறி செய்துள்ளார். அவரைப் பிடிக்க முயன்ற போலீஸாரை தாக்கி விட்டு அவர் தப்பியோட முயன்ற போது குழியில் விழுந்து அடிபட்டு இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு மருதுபாண்டியர்கள் குருபூஜையின் போது பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாச்சேத்தி எஸ்.ஐ ஆல்வின் சுதனை வெட்டிக்கொலை செய்ததால் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபு, பாரதி ஆகியோரின் நெருங்கிய கூட்டாளி தான் இந்த ராமு என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் தான் தற்போது, வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணி ஓய்வு பெறும் நாளில் வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது காவல் துறை வட்டாரத்தில் மட்டுமின்றி அவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிபி சங்கர் ஜிவால் வெள்ளத்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பரிந்துரை செய்துள்ளார். ஆனாலும், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடையிலான பனிப்போரினாலே தான் வெள்ளதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.