மோடியின் தியானத்தை டிவியில் ஒளிபரப்பு செய்தால், தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வேன் : மம்தா பானர்ஜி கடும் எச்சரிக்கை

மோடியின் தியானத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், அது தேர்தல் நடத்தை விதி மீறலாகும். அப்படி ஒளிபரப்பு செய்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியில் தியானம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகிறார். இன்று முதல் ஜூன் 1-ம் தேதி வரை அவர், விவேகானந்தா பாறையில் தியானத்தை மேற்கொள்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மோடி தியானம் செய்யும் மூன்று நாள்களும், பாதுகாப்புப் படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அத்துடன் 3,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் கடற்படையினர், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து ரோந்து பணியில் சுற்றிக் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்ய உள்ளதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தியானம் என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், யாராவது தியானம் செய்யும் போது கேமராவை எடுத்துச் செல்வார்களா? விதவிதமாக போட்டோ எடுப்பார்களா?

மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்புவரை, தியானம் என்ற பெயரில், குளிர்சாதனை அறையில் சென்று உட்காருகிறார். மோடியின் இந்த செயல் குறித்து எந்தக் கட்சியும் ஏன் எதுவும் சொல்லவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

ஒரு நோக்கத்திற்காக பரமாத்மாவால் அனுப்பப்பட்ட கடவுள் எனக் கூறிக்கொள்பவர், ஏன் தியானம் செய்யவேண்டும்? மற்றவர்கள் தானே அவருக்காகத் தியானம் செய்வார்கள். கன்னியாகுமரியில் மோடியின் தியானத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், அது தேர்தல் நடத்தை விதி மீறல். அப்படி செய்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வேன்” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.