வெப்ப அலையால் சுருண்டு விழுந்த பள்ளி மாணவர்கள் – பீகாரில் அதிர்ச்சி

பீகாரில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வடமாநிலங்களில் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

இந்த நிலையில் பீகார் மாநிலம், ஷேக்பூராவில் வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் இன்று பலர் பள்ளியிலேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக ஆசிரியர்கள் பலர் மாணவர்களுக்கு விசிறி கொண்டு வீசிவிட்டு அவர்களை வெப்பத்திலிருந்து ஆசுவாசப்படுத்தும் வேலையில் உடனடியாக ஈடுபட்டனர்.

ஆனாலும் பலர் வெப்பத்தினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்தனர். இதனால் அவர்கள் உடனடியாக வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பல மாணவர்கள் கதறி அழுதனர். பீகாரில் 47 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் வெப்பம் தொடர்பான நோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக பலர் வெப்ப பக்கவாதம் என்ற ஹீட் ஸ்ட்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி பக்சர், ஔரங்காபாத், கயா, கைமூர் மற்றும் ரோஹ்தாஸ் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீதாமர்ஹி, மதுபானி, தர்பங்கா, பாபுவா, ரோஹ்தாஸ், அவுரங்காபாத் மற்றும் நவாடா ஆகிய இடங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.