வருகிற ஜூன் 6 ந்தேதி கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பள்ளித்திறப்பிற்கான முன்னேற்பாடுகள் குறித்தக் கூட்டம் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகம் அருகில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா தலைமை தாங்கி கூட்டத்தினை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது, வருகிற ஜூன் 6 ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றி அதற்கான முன்னேற்பாடு பணிகளை அனைத்து தலைமையாசிரியர்களும் சிறப்பாக மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக பெற்றோர்களின் அலைபேசி எண் சரிபார்ப்பினை இன்னும் நிறைவு செய்யாத பள்ளிகள் உடனடியாக 100 சதவீதம் நிறைவு செய்திடவேண்டும். 10,11,12- ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் அனைவரையும் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க செய்து சிறப்பு வகுப்பின் வாயிலாக அனைவரையும் துணைத்தேர்வில் தேர்ச்சி பெறச் செய்து உயர் படிப்பிற்கு செல்வதை உறுதி செய்திட வேண்டும்.
கல்வி உதவித்தொகை சார்ந்த பணிகளை உடனுக்குடன் முடித்திடவேண்டும். ஜூன் 6- ந்தேதி பள்ளித்திறப்பிற்கு பிறகு 3 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் குறித்து பள்ளி மேலாண்மைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருகை புரிவதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். இந்த ஆண்டு பள்ளித்திறந்த நாள் முதற்கொண்டு தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தினை கல்வித்துறையில் முதன்மையான இடத்திற்கு கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
அதனைத்தொடர்ந்து 31-05-2024 அன்று பணி ஓய்வு பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும், அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகனார் விருது பெற்ற தலைமையாசிரியர்களுக்கும், முதன்மைக்கல்வி அலுவலர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இந்த கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை ரமேஷ், அறந்தாங்கி ராஜேஸ்வரி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், ராஜூ, மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் கி.வேலுச்சாமி, குரு.மாரிமுத்து மற்றும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.