அரசாணை 354-ன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு : தமிழக அரசுக்கு கோரிக்கை

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அரசு மருத்துவர்களுக்கு, அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு, கொரோனா தொற்று காலத்தில் மக்களை காப்பாற்ற போராடி உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என நம் முதல்வர் பதவியேற்ற போது, அரசு மருத்துவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், புதிய ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும், தங்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வலி ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே இருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கிண்டியில் கலைஞர் பெயரில் மருத்துவமனை மற்றும் மதுரையில் கலைஞர் நூலகம், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதோடு, அவற்றை செயல்படுத்தியுள்ளார்.அந்த வரிசையில் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்டு, 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரசாணை 354-க்கு உயிர் கொடுக்கும் வகையில், அதை உடனே செயல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடுவார்கள் என நம்புகிறோம்.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் தன் உயிரையே கொடுத்தார். மருத்துவர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்த போது, நம் முதல்வர் உடனடியாக தன்னுடைய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்ததோடு, முந்தைய அரசை கண்டித்தார். ஆனால், இன்னமும் நம்முடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பது தான் வேதனையாக உள்ளது. கொரோனாவுக்கு பிறகு கூட உயிர்காக்கும் மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்க மறுப்பதோடு, அரசு மருத்துவர்களை தொடர்ந்து வேதனைப்பட வைக்கும் ஒரே மாநிலம் தமிழகம் என்பது தான் வருத்தமான உண்மை.

வரும் ஜூன் 3-ம் தேது கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கொரோனா பேரிடரின் போது மக்களை காப்பாற்ற போராடி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை முதல்வரின் கைகளால் வழங்க வேண்டும். இது மக்களுக்கான அரசு மட்டுமல்ல மருத்துவர்களுக்கான அரசும் தான் என தெரிவித்த முதல்வர், அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டுகிறோம். இதன் மூலம் சுகாதாரத் துறையை இன்னும் சிறப்பாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என உறுதியாக நம்புகிறோம், என்று தெரிவித்துள்ளார்.