உடுமலையில் கூரை ஏறி பந்தை எடுக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் படுகாயம்

உடுமலையில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய மாணவன் பந்தை எடுக்க கூரை மீது ஏறியபோது மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.

உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம், கண்ணு செட்டியார் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் குருராஜ். எலெக்ட்ரிசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரபு (12). அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலை மின்வாரியத்துக்கு சொந்தமான காலி இடத்தில் நண்பர்களுடன் பிரபு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்து அங்குள்ள ஷெட் ஒன்றின் கூரை மீது விழுந்து விட்டது. பந்தை எடுப்பதற்காக கூரை மீது ஏறிய பிரபு உயரழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

உடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொதுமக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் 80-90 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து மின்வாரிய அலுவலக வளாகத்தில் தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின்கம்பிகள் புதியதாக ஒரு மின் கம்பம் நடப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது.