பிரிந்து வாழும் மனைவி அளித்த புகாரின் பேரில், தமிழக காவல் துறை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல் துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். இவர் மீது பெண் காவல் துறை அதிகாரி பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கில், ராஜேஷ் தாஸ்க்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராஜேஷ் தாஸை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது. பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா கணவரைப் பிரிந்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸை, காதலித்து 1992-ம் ஆண்டு பீலா திருமணம் செய்தார். இவர்களுக்கு பிங்கி, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கணவரை சட்ட ரீதியாக பிரியவும் பீலா நடவடிக்கை எடுத்து வந்தார்.
இந்த நிலையில், தையூரில் உள்ள பீலாவின் பண்ணை வீட்டிற்கு ராஜேஷ் தாஸ், 10 பேருடன் அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளார். அத்துடன் வீட்டின் காவலாளியையும் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து, பீலா அளித்த புகாரில், கேளம்பாக்கம் போலீஸார் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று அவரை கேளம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.