திருவள்ளுவர் திருநாள் விழாவை முன்னிட்டு மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வழிபாடு செய்தார்.

உலகப்பொதுமறை தந்து, தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் அன்றைய தினம் தமிழர்களில் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் 400 ஆண்டுகளுக்கு மேலாக திருவள்ளுவர் கோயிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது.

இந்த ஆண்டு வைகாசி அனுஷம் தினம் மற்றும் திருவள்ளுவர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அவரை கோயில் செயல் அலுவலர் தமிழ்செல்வி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, வள்ளுவர் சிலைக்கு தீப ஆராதனை செய்யப்பட்டது.

திருவள்ளுவரை வழிபட்டுவிட்டு புறப்பட்ட ஆளுநரிடம், இங்குள்ள வள்ளுவர் சிலைக்கு வெள்ளை ஆடை தான் உடுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழில் காவி உடையுடன் வள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமப் புறப்பட்டுச் சென்றார்.