எண்ணூர் உர ஆலை வாயு கசிவு வழக்கு : தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் முக்கிய தீர்ப்பு

சென்னை எண்ணூரில் அமோனியா வாயு கசிந்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய தொழிலக பாதுகாப்புத் துறை, இந்திய கடல்சார் வாரியம் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகே உர ஆலையைத் திறக்க வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்தது.

சென்னை எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவு இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.

அதைத்தொடர்ந்து உள்ளூர் மக்களே சக மக்களுக்கு தகவல் தெரிவித்து வசிப்பிடங்களை விட்டு அவர்களை வெளியேற்றினர். வாயு கசிவால் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து கடந்த ஐந்து மாதங்களாக விசாரணை நடைபெற்றது. அப்போது மீனவர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தனியார் உரத் தொழிற்சாலை நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களுடைய வாதங்களை முன்வைத்தனர். இந்நிலையில், தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ நிபுணர் சத்திய கோபால் ஆகியோர் கொண்ட அமர்வு இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில், “தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய தொழிலக பாதுகாப்புத் துறை, இந்திய கடல்சார் வாரியம் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகே கோரமண்டல் உர ஆலையைத் திறக்க வேண்டும். ஆலை நிறுவனம் சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ரூ.5.92 கோடி நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விசாரணையின்போது தெரிவித்த விதிமுறைகள் அனைத்தையும் உர ஆலை நிர்வாகம் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்” என்று பசுமைத் தீர்ப்பாய அமர்வு தெரிவித்துள்ளது.