ராஜீவ்காந்தி படுகொலையின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் நினைவு தூண் : போலீஸார் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினமான இன்று தேசிய பயங்கரவாத ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மனித வெடிகுண்டு விபத்தில் இறந்து போன உதவி ஆய்வாளருக்கு குன்றத்தூரில் போலீஸார் மரியாதை செலுத்தினர்.

ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 மே 21-ம் தேதி நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட பலர் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் குன்றத்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த எத்திராஜூலு என்பவரும் இந்த மனித வெடிகுண்டு விபத்தில் சிக்கி பலியானார்.

அவரை நினைவுகூரும் வகையில் குன்றத்தூர் காவல் நிலைய வளாகத்தின் முன்பு அவருக்கு நினைவு தூண் மண்டபம் கட்டப்பட்டு ஆண்டுதோறும் ராஜீவ்காந்தி நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.

அதன்படி இன்று காலை குன்றத்தூர் காவல் நிலைய வளாகத்தில் உதவி ஆய்வாளர் எத்திராஜூலுவின் நினைவுத் தூணுக்கு குன்றத்தூர் ஆய்வாளர் வேலு தலைமையில் போலீஸார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். மேலும், ஓய்வு பெற்ற போலீஸார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் உதவி ஆய்வாளர் நினைவு தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.