தெலங்கானாவில் மனநலம் பாதிக்கப்பட்ட மகளைக் கொலை செய்த பெற்றோரை போலீஸார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், நெரெல்லாவைச் சேர்ந்தவர் செப்யாலா நர்சய்யா (49). இவரது மனைவி யெல்லவ்வா (43). இத்தம்பதியின் மகள் பிரியங்கா (24). இவர் பல ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பிரியங்காவுக்கு அவரது பெற்றோர் சிகிச்சை அளித்து, பின்னர் திருமணமும் செய்து வைத்தனர். தற்போது பிரியங்காவுக்கு 13 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் பிரியங்காவுக்கு மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டதால் அவரை பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் குணமடையாததால் அவரது பெற்றோர் விரக்தியில் இருந்து வந்தனர். பிரியங்காவால் தினமும் சிரமங்களை அனுபவித்து வந்த செப்யாலா நர்சய்யா, யெல்லவ்வா ஆகிய இருவரும் சேர்ந்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி அன்று பிரியங்கா தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தை கயிற்றால் நெரித்து, கொலை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து பிரியங்கா இயற்கை மரணமடைந்து விட்டதாக அவரது கணவருக்கு தெரிவித்து மறுநாள் இறுதிச் சடங்கு நடத்தினர். இந்நிலையில் பிரியங்காவின் இறப்பில் சந்தேகமடைந்த ஊர்க்காரர்கள், இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் போலீஸார் செப்யாலா நர்சய்யா, யெல்லவ்வா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில் தங்கள் மகளை கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் கரீம் நகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.