அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ, மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவருமான தா.மலரவன் கடந்த சனிக்கிழமை காலமானார். அவரது இல்லத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், ஏ.கே.செல்வராஜ், கந்தசாமி ஆகியோர் மட்டும் உடனிருந்தனர். அப்போது, முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டப்பேரவை கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பங்கேற்கவில்லை.
தனது குடும்ப கோயிலில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால், அவர் துக்க வீட்டிற்கு வரவில்லை என கூறப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களாக அவர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது. குறிப்பாக பாஜகவுடனான கூட்டணி முறிவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் கோவை விமான நிலையத்திலிருந்து கிளம்பிய எடப்பாடி பழனிசாமியை, எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று வழியனுப்பி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “ தேர்தல் விதிமுறை இருப்பதால் அதிகமாக பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை. இபிஎஸ் சென்னை செல்வதால், அவரை வழியனுப்ப வந்தோம். கோவை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் மழை பெய்கின்றது. இருந்தாலும் குடிநீர் பிரச்சினை இருக்கின்றது. கோவை மாவட்டத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் தான் இன்னமும் செயல்பாட்டில் இருக்கின்றது. சீரான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், “பல ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகின்றன. ஒரு கட்சியை சார்ந்து, தினமும் எங்களை டேமேஜ் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். சிறப்பான முறையில் இபிஎஸ் ஆட்சி நடத்தினார். தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என நினைக்கின்றனர். அதிமுக எதிர் கட்சியாக ஆன பின்னரும் ஒரு சிலரின் அஜென்டாவைப் பின்பற்றி, எங்களுக்குள் பிளவு என எழுதுகின்றனர். எந்த குழப்பமும் கிடையாது. குழப்பம் செய்தவர்கள் வெளியே போய்விட்டனர். ஒரு பிம்பத்தை உருவாக்கவே பார்க்கின்றனர். அதிமுக பேரை சென்னால் பேப்பரை படிப்பார்கள் என்பதற்காக இப்படி எழுதுகின்றனர்” என்றார்.
அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தை சந்தித்தீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் எஸ்.பி வேலுமணி நகர்ந்து சென்றார்.