வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்று விட்டு, திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று சீராவட்டம் பாலம் அருகே கவிழ்ந்து விபத்த்திற்குள்ளானதில், வேனில் பயணித்த ஓட்டுநர், நடத்துநர் உட்பட 17 பேர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
கேரள மாநிலம் நத்தையம் பகுதியைச் சேர்ந்த 17 பேர் வேளாங்கண்ணிக்கு சொகுசு வேன் ஒன்றில் நேற்று சுற்றுலா சென்றனர். பிரார்த்தனை முடித்துவிட்டு வேளாங்கண்ணியில் இருந்து இன்று காலை கிழக்கு கடற்கரை சாலை வழியாக கேரளா சென்றுள்ளனர். அப்போது திருக்குவளை அருகே சீராவட்டம் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உள்ளிட்ட வேனில் பயணித்த 17 பேர் சிறு காயங்களோடு உயிர்த்தப்பினர். காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். நாகை மாவட்டத்தில் காலை முதலே பரவலாக மழை பெய்து வருவதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
மழையால் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து சம்பவம் குறித்து திருக்குவளை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.