செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள்கோவிலில் உள்ள பலராத்திரி நரசிம்ம பெருமாள் கோயிலில் தேரோட்டம் ஆயிரக்கணக்கில் பங்கேற்ற பக்தர்கள் வெள்ளத்தில் விமர்சையாக நடைபெற்றது.
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில் பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மலையை குடைந்து ஒரே கல்லில் உருவான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் முக்கண்ணோடு அமா்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்கி வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழ் ஆண்டு கடந்த மே 13ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட வைகாசி பெருவிழாவில் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் நரசிம்ம பெருமாள் அமர்ந்து வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
7ம் நாள் இன்று தேரோட்டம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க நரசிம்மர், அகோபிலவள்ளி தாயார் சமேதமாக தேரில் எழுந்தருளி வீதி உலா சென்றார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் வீதியுலா வந்தது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி பக்தி பரவசமடைந்தனர். தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர். வீதியுலாவை தொடர்ந்து மீண்டும் தேர், நிலைக்கு வந்தது.
இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பெருமாளின் ஆசியினை பெற்று மகிழ்ந்தனர். பாதுகாப்பு பணியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கோயில் சார்பில் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் பணியாளா்கள், கோயில் பட்டாச்சாரியா்கள் மற்றும் உற்சவ உபயதாரா்கள் செய்திருந்தனர்.