அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை எந்த அரசாங்கத்தினாலும் மாற்ற முடியாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆர்எஸ்எஸ் நாயகன் மோகன் பகவத் அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து பேசியுள்ளார். பல பாஜக தலைவர்களும் இதே போன்று பேசியும் பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருந்து வருகிறார். ஆனால், 56 இஞ்ச் மார்பு பற்றி அடிக்கடி அவர் பேசுவார். ஆனால். அரசியலமைப்பிற்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று குற்றம் சாட்டிப் பேசியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி நாசிக்கில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். மக்களவைத் தேர்தல் ஐந்தாம் கட்டமாக 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் கூட்டணி கட்சியான சிவசேனா வேட்பாளர் ஹேமந்த் துக்காராம் கோட்சேவை ஆதரித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மல்லிகார்ஜுன கார்கேவுக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அப்போது அவர், ” நான்கு கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே 20-ம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், பாஜக மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால், அரசியலமைப்பு மாற்றப்படும் என்று காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. அரசியலமைப்பை காங்கிரஸ் 80 முறை திருத்தியுள்ளது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை எந்த அரசாங்கத்தினாலும் மாற்ற முடியாது. அதில் உள்ள செக்சன்களில் சிறு மாற்றம் வேண்டுமானால் செய்யலாம்.
மத்திய அரசு அனைத்து சமூக மக்களும் பயனடையும் திட்டங்களைச் செய்து வருகிறது. ஏழை மக்கள் முன்னேற பல்வேறு திட்டங்களை வெளியிட்டுள்ளது” என்று நிதின் கட்கரி கூறினார்.