திருவாரூரில் போட்டி போட்ட தனியார் பேருந்துகள் : பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் காயம்

திருவாரூர் அருகே தனியார் பேருந்துகள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு ஓட்டிய போது ஒரு பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்கும், திருவாரூரிலிருந்து, மயிலாடுதுறைக்கும் தினசரி செல்லக்கூடிய ராதாமணி என்கிற தனியார் பேருந்து, இன்று காலை மயிலாடுதுறையிலிருந்து, திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு தனியார் பேருந்துக்கும், ராதாமணி பேருந்துக்கும் இடையே போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. யார் முந்திச் சென்று பயணிகளை ஏற்றுவது என்கிற போட்டியில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் போட்டி போட்டுக் கொண்டு பேருந்துகளை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட தென்குடி என்கிற இடத்தில், முன்னாள் சென்ற தனியார் பேருந்தை முந்துவதற்காக, ராதாமணி தனியார் பேருந்து ஓட்டுநர் முயற்சித்தபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயல் வெளியில் கவிழ்ந்தது.

இந்தப் பேருந்தில் முப்பதுக்கு மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில் அதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் ஐந்து ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள நன்னிலம் அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நன்னிலம் போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தனியார் பேருந்துகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு, வந்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பேருந்து வேறு எங்காவது மோதி இருந்தால் விளைவுகள் மிக மோசமாகி இருக்கும் என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.