தள்ளுபடியான ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் : விடுமுறை கால அமர்வில் வழக்கறிஞர் சங்கம் முறையீடு

ஏற்கெனவே தள்ளுபடியான ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விடுமுறை கால அமர்வில் மீண்டும் தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கடந்த மே 1 முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, முக்கியமான மற்றும் அவசரமான வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரும் மனுக்கள் அவசர வழக்காக கருதப்படுவதில்லை.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் நடைபெற்ற அவசர செயற்குழுக் கூட்டத்தில் விடுமுறை கால அமர்வில் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை மீண்டும் தாக்கல் செய்ய அனுமதிக்கும்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறையை வலியுறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எம்எச்ஏஏ) தலைவரான ஜி.மோகனகிருஷ்ணன் விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பாக ஆஜராகி ஒரு முறையீடு செய்தார். அதில், ‘‘ஜாமீன் கிடைக்காமல் பலர் மாதக்கணக்கில் சிறையில் இருந்து வருவதால் ஏற்கெனவே தள்ளுபடியான ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விடுமுறை கால சிறப்பு அமர்வில் மீண்டும் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல முன்ஜாமீன் மனுக்களையும் அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இதுகுறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும்” என நீதிபதி தெரிவித்துள்ளார்.