இந்தியா கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ஒடிசா தலைநகர் புபனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக நரேந்திர மோடி அவருக்கு ஆதரவளித்து வருகிறார். ஒடிசாவின் முன்னேற்றத்துக்காக அவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் நினைத்ததற்கு எதிராக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் பகிரங்க சண்டை ஒடிசாவுக்கு நல்லதல்ல.
ஒடிசாவில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. அவை பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இங்குள்ள வளங்களால் வெளியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் உருவாகினாலும் இங்குள்ள மக்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால், மத்திய, மாநில அரசுகள் மாற வேண்டும். சிட்-பண்ட் மற்றும் சுரங்க முறைகேடுகளால் ஒடிசா அரசு ஊழல் அரசாக இருக்கிறது. எனவே இந்த முறை பிஜூ ஜனதா தளத்துக்கு வாய்ப்பு கிடைக்காது. ஒடிசாவில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து மாநில அரசு கவனம் செலுத்தவில்லை. ஒடிசாவை அழித்ததில் பாஜகவுக்கும் பிஜேடிக்கும் சம பங்கு உண்டு.
காங்கிரஸ் 5 நீதிகளையும் 25 உத்தரவாதங்களையும் அளித்துள்ளது. இளைஞர் நீதி, பெண்கள் நீதி, விவசாயிகள் நீதி, தொழிலாளர் நீதி, சமநீதி ஆகிய நீதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது. கண்டிப்பாக நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம். உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு வந்த கட்சி காங்கிரஸ். கல்விக்கான உரிமையைக் கொடுத்தது காங்கிரஸ். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தொடங்கியதும் காங்கிரஸ்தான். இவற்றையெல்லாம் நாங்கள் முன்கூட்டியே கூறவில்லை. ஆனாலும், நாங்கள் இதையெல்லாம் செய்தோம். எங்கள் அரசு வந்ததும் 10 கிலோ இலவச ரேஷன் உள்பட அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றுவோம். 2024ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கப் போவதில்லை. பெரும்பான்மை பலத்துடன் இந்தியா கூட்டணிதான் அரசை அமைக்கப் போகிறது” என தெரிவித்தார்.