புதுச்சேரியில் கடல் சீற்றம் காரணமாக கடற்கரையிலிருந்து மக்களை வெளியேற்றிய போலீஸார்

புதுச்சேரியில் இன்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தை அடுத்து மக்களை போலீஸார் கடற்கரையிலிருந்து வெளியேற்றினர்.

புதுவையில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. கோடை வெயிலின் வெப்ப தாக்கத்தால் புதுவை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இதனிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுவை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி புதுச்சேரியில் கடந்த வாரத்தில் கிராமப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. தொடர்ந்து பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது. குளிர்ந்த காற்று வீசுகிறது. அதிகாலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து இருண்டுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றுடன், வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது, புதுவை மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மழை காரணமாக நீடராஜப்பர் வீதியில் இருந்த பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து மரத்தை அகற்றினர். கோடை விடுமுறை என்பதால் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். வானிலை மாற்றத்தால் காலை முதலே சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். ஆனால், கடல் சீற்றம் காரணமாகவும் கனமழை எச்சரிக்கை காரணமாகவும், கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் போலீஸார் தடை விதித்தனர்.