பிரதமர் மோடியின் அரசியல் பயணம் முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமே என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், மக்களின் தங்கம் மற்றும் சொத்துகளை பறித்து, அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு விநியோகிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். முஸ்லிம் சமூகத்தினரை தான் பிரதமர் இவ்வாறு குறிப்பிடுகிறார் என புரிந்து கொள்ளப்பட்டு, பிரதமர் இந்து – முஸ்லிம் இடையே மத ரீதியான வெறுப்பை தூண்டுகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பிரதமர் மோடி நேற்று அளித்திருந்த பேட்டியில், “நான் அதிர்ச்சியடைந்தேன். அதிக குழந்தைகளைக் கொண்டவர்களைப் பற்றி ஒருவர் பேசும் போதெல்லாம், அவர்கள் முஸ்லிம்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது?முஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு அநியாயம் செய்கிறீர்கள்? ஏழைக் குடும்பங்களிலும் இதுதான் நிலை. வறுமை இருக்கும் இடத்தில், அவர்களின் சமூக வட்டத்தைப் பொருட்படுத்தாமல், அதிகமான குழந்தைகள் உள்ளனர். நான் இந்து அல்லது முஸ்லிம் என்று குறிப்பிடவில்லை” என கூறினார்.
இந்நிலையில் பிரதமரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து அகில இந்திய மஜ்லிஸ் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் அசாதுதீன் ஒவைசி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மோடி தனது உரையில் முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைக் கொண்டவர்கள் என்றும் கூறினார்.இப்போது முஸ்லிம்களைப் பற்றி பேசவில்லை என்றும், இந்து – முஸ்லிம் ஒப்பீட்டை தான் பயன்படுத்தியதில்லை என்றும் கூறுகிறார். இந்த தவறான விளக்கத்தை கொடுக்க ஏன் இவ்வளவு நேரம் ஆனது? மோடியின் அரசியல் பயணம் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது” என அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.