விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கத் தேவையான பாதுகாப்பினை மேற்கொள்ளாத திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நெல் உள்பட உணவு தானியங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கத் தேவையான கிடங்குகளை போர்க்கால அடிப்படையில் கட்டிட முதலமைச்சர் உத்தரவிட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விவசாயிகளிடமிருந்து நெல் மற்றும் இதர தானியங்களை கொள்முதல் செய்து அவற்றை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கும் வகையில், கிடங்குகளை கட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. ஆனால், இதைச் செய்ய திமுக அரசு தவறிவிட்டது.
கடந்த மூன்று ஆண்டு காலமாக, நெல் மற்றும் இதர தானியங்கள் மழையில் நனைவதும், இதன் விளைவாக விவசாயிகளுக்கு குறைந்த விலை கிடைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து நான் பல அறிக்கைகள் வெளியிட்டும், இதற்கான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. உண்மை நிலை இவ்வாறிருக்க, இந்த ஆட்சி சொல்லாட்சியல்ல செயலாட்சி என்று முதலமைச்சர் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது வாக்குறுதிகளை நிறைவேற்றாத பொய்யாட்சி.
அண்மையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் செஞ்சியிலுள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாகவும், நெல் மூட்டைகள் மழையில் நனைவதன் காரணமாக குறைந்த விலைதான் கிடைக்கிறது என்றும், தார்ப்பாய் கூட வழங்கப்படவில்லை என்றும் மேல்மருவத்தூர், திண்டிவனம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சுவடு மறைவதற்குள், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த கருநீலம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த நெல்லினை உதிரியாகவும், 5,000-க்கும் மேற்பட்ட மூட்டைகளிலும் கொண்டு வந்ததாகவும், இரு தினங்களுக்கு முன்பு பெய்த திடீர் மழை காரணமாக அனைத்து நெல் மூட்டைகளும் சேதமடைந்ததாகவும், உடனுக்குடன் எடை போட்டு அரவை நிலையத்திற்கு அனுப்பியிருந்தால் நெல் மூட்டைகள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என்றும், அரசின் தாமதமான நடவடிக்கை காரணமாக தங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதுமே நெல் மூட்டைகளை பாதுகாக்க இயலாத ஓர் அவல நிலை நிலவுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படுவது ஏழையெளிய விவசாயிகள்தான். விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை என்று சொல்லிவிட்டு, விவசாயிகளின் நலன்களை புறந்தள்ளுவதில் எந்தப் பலனும் இல்லை. நெல் மூட்டைகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு மூன்று ஆண்டுகள் கடந்தும் பூர்த்தி செய்யப்படவில்லை. மழையில் நெல் மூட்டைகள் நனைவது என்பது தொடர் கதையாக விளங்குகிறது.
இந்தத் தொடர் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நெல் உள்பட உணவு தானியங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கத் தேவையான கிடங்குகளை போர்க்கால அடிப்படையில் கட்டிட முதலமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.