மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன், பலத்த காற்றுடன் பெய்த மழையால், சாலையோரம் இருந்த மரம் வேருடன் சாய்ந்து அரசுப் பேருந்து மீது விழுந்ததில் பேருந்து சேதமடைந்தது. இதில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் வெப்பக் காற்று வீசி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், இரவில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம், உள்ளிட்ட பகுதியில் இன்று மதியம் 3 மணி முதல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
பலத்த மழை காரணமாக, ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள், மின் ஒயர்கள் மீது மரக்கிளைகள் விழுந்து மின் விநியோகம் தடைப்பட்டது. தாழ்வான இடங்களில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து ஓடி தேங்கி காணப்பட்டது. இந்நிலையில், சேலத்தில் இருந்து மேட்டூர் வழியாக, மாதேஸ்வரன் மலைக்கு 17 பயணிகளுடன் அரசு பேருந்து வந்தது. அப்போது, மேட்டூர் ரயில் நிலைய நிறுத்தத்தில் பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கினர்.
அங்கே, பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் திடீரென வேருடன் முறிந்து பேருந்து மீது விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு, காவல், நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் வேப்பமரத்தை அகற்றினர். இதன் காரணமாக, சேலம் – மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார், சேலத்தில் இருந்து வரும் வாகனங்களை கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் இருந்து சிட்கோ வழியாக மேட்டூருக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், மேட்டுரில் இருந்து வரும் வாகனங்களும் தங்கமாபுரிபட்டணத்தில் இருந்து சிட்கோ வழியாக சேலத்துக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாக, கோடை மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.