“மு.க.ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளேன்” என 3 ஆண்டுகள் திமுக ஆட்சி நிறைவடைந்து 4 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்கள் நல் ஆதரவையும் நம்பிக்கையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றேன்.
தற்போது இந்த ஆட்சி 3 ஆண்டுகளை முடித்துவிட்டு, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல திட்டங்களால் மகிழச்சி அடைந்துள்ளனர். தினந்தோறும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே அதற்கு சாட்சி.
ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு என சொன்னார் கலைஞர். இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என நிரூபித்துக் காட்டியுள்ளேன். இது எனது அரசு அல்ல, நமது அரசு. அந்த வகையில், நாடும் மாநிலமும் பயன் பெற உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சி பயணத்தை உங்கள் வாழ்த்தோடு தொடர்வேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் மக்கள் திமுக அரசின் சாதனைகளை பாராட்டிய கருத்துளும் இடம்பெற்றுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன், தோழி பெண்கள் தங்கும் விடுதி, ரூ 1000 மகளிர் உதவித் தொகை, பெண்கள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணம், முதல்வரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் பாராட்டி பேசியுள்ளனர்.
மேலும் தனது எக்ஸ் பதிவில், “இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி! மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன்செல்கிறேன், பெருமையோடு சொல்கிறேன்… தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” எனத் தெரிவித்துள்ளார்.