“ஜெயக்குமார் தனசிங் படுகொலை வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை தமிழகக் காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங், உவரியை அடுத்த கரைசுத்துபுதூர் என்ற இடத்தில் உள்ள அவரது தோட்டத்தில் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஓர் அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவராக இருப்பவர், காவல் துறையில் புகார் அளித்தும் கூட அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மகிழுந்து அவரது தோட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அவரது உடலின் பெரும்பகுதி எரிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. அவரது உடலை படம் பிடிப்பதற்குக் கூட காவல் துறையினர் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஐயத்தை உறுதி செய்திருக்கிறது.
ஜெயக்குமாரை கடந்த 3 நாட்களாகவே காணவில்லை. இது தொடர்பாக அவரது மனைவியும், மகனும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்களுக்கு முன்பாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஜெயக்குமாரே தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டிருந்தால் ஜெயக்குமாரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காவல்துறை செயல்படத் தவறி விட்டது. ஜெயக்குமாரின் படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஜெயக்குமார் படுகொலை வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை தமிழகக் காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.
இதனிடையே, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கை – கால்கள் கட்டப்பட்டுள்ளதால் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு முழு விவரங்கள் வெளியே வரும் எனவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.