கடந்த சில நாட்களாக காணவில்லை என்று தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங், பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கரைச்சுத்துப் புதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடுவதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தனது தந்தையை கடந்த 2-ம் தேதி முதல் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை என ஜெயக்குமாரின் மகன் கருத்தையா, நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகாரின் அடிப்படையில் நெல்லை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஜெயக்குமார் தனசிங்கை தேடி வந்தனர். அவரது செல்போன் உரையாடல் மற்றும் ஜெயக்குமார் கடைசியாக சென்ற இடம் குறித்து விசாரித்து வந்தனர்.
மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பிரமுகர்களிடம், அவருக்கு உட்கட்சி பகை ஏதாவது இருக்கிறதா என்றும் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஜெயக்குமார் தனசிங், கடந்த 30-ம் தேதியன்று ‘மரண வாக்குமூலம்’ என்ற தலைப்பில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது தெரிய வந்துள்ளது.
அதில்,’தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து உள்ளது. சொத்துப் பிரச்சினை, கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தன்னுடன் சிலர் மோதல் போக்கில் இருந்து வருகின்றனர்’ என்று குறிப்பிட்டிருந்தார் ஜெயக்குமார்.
இந்நிலையில், கரைச்சுத்து புதூரில் ஜெயக்குமார் வீட்டுக்கு அருகே பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு இன்று தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அது ஜெயக்குமாரின் உடல் என்று தெரியவந்தது. மர்ம நபர்கள் ஜெயக்குமாரை கொலை செய்து தீயிட்டு கொளுத்தியதும், உடல் பாதி எரிந்த நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.