பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அனுப்பப்பட்ட 20 டிரோன்களையும், அவற்றில் இருந்த ஆயுதங்கள் மற்றும் சுமார் 15 கிலோ போதைப்பொருளையும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
நவீன தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வீசப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதனை கண்டறியும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அவற்றை சுட்டு வீழ்த்தி வருகிறார்கள். மேலும் பல ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.
அந்தவகையில் கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 20 டிரோன்களை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த டிரோன்களில் அனுப்பப்பட்ட சுமார் 15 கிலோ போதைப்பொருள் மற்றும் 3 துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும் 2 பாகிஸ்தானியர்கள் உட்பட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.1.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தானியர்களின் ஊருடுவல்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ட்ரோன்கள் வழியாக ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை இந்தியாவுக்குள் கடத்துவது அதிகரித்துள்ளது. அதனால் இந்த வழிமுறை குறித்து கண்டறிந்து தடுக்கும் பணிகளை வீரர்கள் செய்து வருகின்றனர்.