பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் சவுக்கு சங்கரை கைது செய்து விசாரணைக்காக கோவைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் சிறிய விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கோவைக்கு செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி பெற்ற பின்னர், கோவைக்கு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை போலீசார் அழைத்துச் சென்றனர். கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து சவுக்கு சங்கரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளநிலையில், விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். “விடியா திமுக அரசின் ஊழல்களைத் தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்.
ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் ஸ்டாலின் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.
சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.