“பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கும். நாட்டின் பெண் சக்திக்கு ஆதரவு என்பதே பாஜகவின் தெளிவான நிலைப்பாடு. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான விசாரணைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்” என்று ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் மாநிலம் குவாஹாட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, “பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கும். நாட்டின் பெண் சக்திக்கு ஆதரவு என்பதே பாஜகவின் தெளிவான நிலைப்பாடு.
இதில் காங்கிரஸ் கட்சியிடம் நான் கேட்க விரும்புவது அங்கு நடைபெறுவது யாருடைய ஆட்சி. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தானே. அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?. கர்நாடக மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை இது. இதில் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. கர்நாடக மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக நடத்தப்படும் எந்த விசாரணைக்கும் நாங்கள் ஆதரவாக உள்ளோம். எங்களின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அநேகமாக இன்று அக்கட்சியின் குழு கூடி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
இதே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமித் ஷா, “பாஜக 400 இடங்களை வென்றால் இடஒதுகீட்டை நிறுத்திவிடும் என்று காங்கிரஸ் கட்சி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. இவை அடிப்படை ஆதாரமற்ற தகவல். உண்மைக்கு புறம்பான பிரச்சாரம். இது பற்றி நான் தெளிவாக நான் விளக்க விரும்புகிறேன். பாஜக எப்போதும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை ஆதரிக்கும். மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கே நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆனால், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மக்களின் பாதுகாவலராக எப்போதும் பாஜக அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 100 இடங்களைத் தாண்டி வெல்லும் என்பது எங்களின் மதிப்பீடு. ‘400 தொகுதிகளில் வெற்றி’ என்கிற எங்களின் இலக்கை நோக்கி நாங்கள் முன்னேறி வருகிறோம். முதல் இரண்டு கட்ட தேர்தல்களின்படி, தென்னிந்தியாவில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் விரக்தியின் வெளிப்பாடாக என்னையும் பல பாஜக தலைவர்களையும் கொண்ட போலி வீடியோக்களை பரப்பி வருகிறது. போலியான வீடியோக்களை பரப்பி மக்களின் ஆதரவைப் பெறும் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.
உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்களா எனத் தெரியாது. ஆனால், அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தன்னம்பிக்கை இல்லை என்பதையே இப்போது நடந்து வரும் குழப்பங்கள் காட்டுகிறது. தங்களின் பாரம்பரிய தொகுதிகளை விட்டு அவர்கள் ஓடிவிட்டனர்.” என்று அமித் ஷா விமர்சித்தார்.