மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 210-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். மாநிலத்தில் அமைதி இன்னும் முழுமையாக திரும்பவில்லை.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் அங்கு 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் மக்களவை தொகுதியில் முழுமையாகவும், வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 15 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 69.18 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 22 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடந்தது.
தொடர்ந்து நேற்று (ஏப்.26) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஒரு மக்களவைத் தொகுதியில் நடைபெற்றது. ஓரிரு இடங்களில் வாக்குச்சாவடியை சூறையாடிய சம்பவங்கள் நடந்தன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பின்னிரவு பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரன்சேனா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் 128வது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களை நோக்கி வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவினர் நிகழ்த்தியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.