தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 4-ந் தேதி வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி தனி அணியை உருவாக்கி அ.தி.மு.க. தேர்தலை சந்தித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வின் தனித்தன்மையை காப்பாற்றவும், தனது தனித்துவத்தை நிலை நாட்டவும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் 2026-ம்ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி உள்ளார். கட்சியினர் புத்துணர்ச்சியுடன் செயல்படும் வகையில் அ.தி.மு.க.வில் உள்ள 2½ கோடி தொண்டர்களுக்கும் விரைவில் புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்குவதற்கு அவர் முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனது புகைப்படம், பெயர், கையெழுத்து ஆகியவற்றுடன் உறுப்பினர் அட்டைகளை தயாரிக்க அவர் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த பணிகள் நிறைவு பெற்று அட்டைகள் தயாராக உள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் புதிய உறுப்பினர் அட்டையில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த அட்டைகள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.
அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அட்டைகளை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள், தங்களது பகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு புதிய அட்டைகளை வழங்க உள்ளனர்.